சென்னை | டிக்கெட் எடுப்பதில் பயங்கர மோதல்: பயணி தாக்கி கீழே தள்ளியதில் பேருந்து நடத்துநர் உயிரிழப்பு


சென்னை: அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறின்போது, பயணி கீழே தள்ளியதில் பேருந்துநடத்துநர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

சென்னை எம்.கே.பி நகரிலிருந்து கோயம்பேடு நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்துள்ளது. அதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினரும் இருந்துள்ளனர்.

பேருந்து அண்ணாநகர் ஆர்ச், அமைந்தகரை என்எஸ்கே பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் (53) பேருந்தை ஓரமாக நிறுத்தி, டிக்கெட் கொடுத்துள்ளார். அப்போது, பேருந்துக்குள் இருந்த வேலூர் குடும்பத்தினருக்கும் நடத்துநருக்கும் இடையே டிக்கெட் எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருவரை ஒருவர் பேருந்துக்குள்ளே தாக்கி கொண்டுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்து கீழே இறங்கியும் சண்டை போட்டுள்ளனர். இதில், தாக்கி கீழே தள்ளி விடப்பட்டதில் நடத்துநர் ஜெகன்குமார் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். மோதலில் ஈடுபட்ட வேலூர் பயணி கோவிந்தன் (53) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அமைந்தகரை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பயணி கோவிந்தனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையறிந்த பேருந்து ஓட்டுநர்கள் சிலர் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தினர். பின்னர் சமாதானமடைந்தனர். பேருந்துகள் வழக்கம்போல ஓடின. இந்த விவகாரம் குறித்து அமைந்தகரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x