சாத்தான்குளம் வழக்கில் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம்


மதுரை: சத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தான்குளத்தில் கடந்த 202Oல் கரோனா பரவலின் போது கரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இதில் படுகாயமடைந்து இருவரும் இறந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கல் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, மதுரை விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரிய மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, மரண வழக்கை அக்.17-குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும், மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "ஒவ்வொரு சாட்சியையும், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின், வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை நடத்துவதால் காலதாமதமாகிறது. எனவே, விசாரணையை முடிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்" என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்து, "விசாரணையை முடிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

x