விழுப்புரம்: செஞ்சி அருகே உள்ள வடபுத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக காசிராஜன், மூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல் பணியாளர்கள் விற்பனை முடித்து பின்னர் வசூல்தொகை ரூ.75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அவ்வழியாகச் சென்ற வடபுத்தூர் விவசாயி ஒருவர், டாஸ்மாக் கடையின் முன்பக்க இரும்பு கேட் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, செஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது, டாஸ்மாக் கடையின் முன்பக்க கேட் மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு அதனை திருடர்கள் கையோடு கொண்டு சென்றதும், மதுபாட்டில்களை திருடியவர்கள் வேனில் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை போன மதுபாட்டில்களை தவிர, அந்தக் கடையில் மேலும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.