பாலியல் வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு


ஹைதராபாத்: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தெலுங்கு நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

பிரபல நடன இயக்குநர், ஷேக் ஜானி பாஷா என்ற ஜானி மாஸ்டர், தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து இவர் நடனம் அமைத்த ‘மேகம் கருக்காதா’ பாடலுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜானி மாஸ்டர் குழுவில் இடம்பெற்றிருந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், தன்னை பல வருடமாக அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் புகார் கூறினார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை செப்டம்பர் 19ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதன் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் ஜானி மாஸ்டரை சந்தித்ததாகவும், 2 ஆண்டுகள் கழித்து, தனக்கு உதவி நடன இயக்குநராக வேலை கொடுத்ததாகவும் தெரிவித்தார். இந்த காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்த பெண் குற்றம் சாட்டினார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜானி மாஸ்டர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

x