காஜியாபாத்: "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடும்படி உருது பாடம் சொல்லிக் கொடுக்கும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
காஜியாபாத்தின் கிராசிங்ஸ் ரிபப்ளிக் என்ற இடத்தில் உள்ள ஒரு சொசைட்டியில் பஞ்ஷீல் வெலிங்டனின் தரை தளத்தில் லிஃப்டுக்காக உருது ஆசிரியர் முகமது ஆலம்கிர் காத்திருந்தார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் மனோஜ் குமார், குடிபோதையில் ஆலம்கிரை மிரட்டியுள்ளார்.
அப்போது குடியிருப்பின் 16வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் உருது கற்றுக்கொடுக்க செல்கிறேன் என்று மனோஜ் குமாருக்கு ஆலம்கிர் பதிலளித்தார். இதனையடுத்து "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட வேண்டும் என்று மனோஜ் குமார், ஆலம்கிரை வற்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து கோபமடைந்த மனோஜ்குமார், முதல் தளத்தில் லிஃப்ட் நின்றதும் ஆலம்கிரை வெளியே தள்ளிவிட்டுள்ளார். மேலும், மனோஜ் குமார் மற்றொரு குடியிருப்பாளரைக் கூப்பிட்டு, "எப்போதிலிருந்து முஸ்லிம்கள் இந்த சமுதாயத்திற்கு வரத் தொடங்கினார்கள்” என்று கேட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மனோஜ் குமார், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிஎன்எஸ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.