ராமநாதபுரம்: நில மோசடி வழக்கில் தன்னை ஏமாற்றியவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.
தனது சொத்துக்களை நிர்வகித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன் குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடியை மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மே மாதம் 23ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
செபி பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்த 64 ஏக்கர் நிலத்தை அழகப்பன் வாங்கிக் கொடுத்து ரூ.3.16 கோடி முறைகேடு செய்ததாக அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி, புரோக்கர் நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் அழகப்பனின் மேலாளர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ரமேஷ் சங்கர் சோனாய் சிறையில் உள்ளார். இவரது ஜாமீன் மனு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கவுதமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இவ்வழக்கில் மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரமேஷ் சங்கர் சோனாய், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீதித்துறை நடுவர் பிரபாகரன், இவ்வழக்கில் கடந்த 18ம் தேதி ரமேஷ் சங்கர் சோனாயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நடிகை கவுதமி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் இன்று நேரில் ஆஜராகி இரண்டாவது முறையாக ரமேஷ் சங்கர் சோனாய்க்கு பிணை வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார்.