டியூஷன் ஆசிரியர் அறைந்ததில் 9 வயது சிறுமிக்கு கடுமையான மூளை பாதிப்பு: வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை


மும்பை: டியூஷன் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததால், மூளையில் பலத்த காயம் ஏற்பட்ட 9 வயது மாணவி உயிருக்குப் போராடி வருகிறார்.

மும்பையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லசோபாரா என்ற ஊரில், அக்டோபர் 5 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. 20 வயதான தனியார் டியூஷன் ஆசிரியர் ரத்னா சிங், சிறுமி வகுப்பில் குறும்பு செய்ததாகக் கூறி அவளை அறைந்தார்.

வேகமாக அறைந்த காரணத்தால் பெண்ணின் காதணி கன்னத்தில் சிக்கி காயம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தீபிகா ஆரம்பத்தில் காது கேளாமையால் அவதிப்பட்டார். பின்னர் தலைவலி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் உருவாகத் தொடங்கியது. ஒரு வாரம் கழித்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கடுமையான மூளைக் காயம், தாடை விறைப்பு, மூச்சுக் குழாயில் பலத்த காயம், டெட்டனஸ் தொற்று போன்றவற்றால் மும்பையில் உள்ள கே.ஜே.சோமையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒன்பது நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சையில் இருக்கும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் டியூசன் ஆசிரியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ரத்னா சிங்கிடம் விசாரணைக்காக போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி மருத்துவரின் அறிக்கைக்கு பிறகு குற்றப்பத்திரிகை தயாரிப்பது குறித்து முடிவு செய்வோம் என போலீஸார் தெரிவித்தனர்.

x