கேரளா: இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் கலால் அலுவலகத்திற்குள் நுழைந்து கஞ்சா சுருட்டப்பட்ட பீடியை பற்றவைக்க தீப்பெட்டி கேட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி பகுதிக்கு கடந்த திங்கள்கிழமையன்று, திருச்சூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் சுற்றுலா வந்தனர். அங்கே மாணவர்கள் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்களுக்கு கஞ்சா பீடியை பற்றவைக்க தீப்பெட்டி தேவைப்பட்டது. எனவே அங்குள்ள கலால் அலுவலகத்தின் பின்புறத்தைப் பார்த்த மாணவர்கள், அதை ஒரு பட்டறை என்று தவறாக நினைத்து உள்ளே புகுந்து தீப்பெட்டி கேட்டனர்.
மாணவர்கள் திடீரென அதிகாரிகளை பார்த்ததும், ஆபத்தை உணர்ந்து வெளியே ஓடினர். ஆனால், அவர்களை துரத்திச் சென்று அதிகாரிகள் பிடித்தனர். மாணவர்களிடம் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. அவர்களிடமிருந்து கஞ்சா, ஹாஷிஷ் ஆயில் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது போதை மருந்துகள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா வந்த அனைத்து மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு ஆசிரியர்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பப்பட்டனர்.