அருப்புக்கோட்டை | அரட்டை அடித்ததைத் கண்டித்ததால் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை 


அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நேற்று இரவு கூலித் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டு தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (45). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகாத இவர், நிரந்தர வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது தினக் கூலி வேலை பார்த்து வந்தார். அருப்புக்கோட்டையிலிருந்து மேட்டுத் தொட்டியாங்குளம் செல்லும் வழியில் வி.வி.ஆர்.காலனி உள்ளது. அந்த வழியாக முனியாண்டி அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து மேட்டுதொட்டியாங்குளம் செல்லும் போது வி.வி.ஆர்.காலனி பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் அருண் (23), ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பாண்டி (39) ஆகியோர் செல்போன் பார்த்தபடி அரட்டை அடித்துக் கொண்டு இருந்துள்ளனர். இதைப் பார்த்த முனியாண்டி, அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், முனியாண்டிக்கும் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அருப்புக்கோட்டையிலிருந்து தனது பைக்கில் முனியாண்டி மேட்டுதொட்டியாங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். பழைய மரக்கடை அருகே சென்ற போது அவரை வழிமறித்த அருணும் முத்துப்பாண்டியும் அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முனியாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அருண், முத்துப்பாண்டி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x