கோவில்பட்டி அருகே பரபரப்பு: காட்டுப் பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த 5 மயில்கள்


கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி காட்டுப்பகுதியில் 5 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் பிரதானமாக மக்காச்சோளம் உள்ளிட்ட விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனர். இந்நிலையில், காட்டு விலங்குகள், பறவைகள் மானாவாரி நிலங்களில் விதைக்கப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட விதைகளை தோண்டி எடுத்து தின்று அழித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தின் காட்டுப் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இன்று 3 பெண் மயில்களும், கிணற்றுக்கு வெளியில் ஒரு பெண் மயிலும் இறந்துகிடந்தன. இதில் பெண் மயில்கள் இறந்து 3 நாட்களுக்கு மேலாகியதால் துர்நாற்றம் வீசியது. அந்த நிலத்துக்கு சற்று தொலைவில் ஆண் மயில் ஒன்றும் இறந்து கிடந்தது. இன்னொரு ஆண் மயில் உயிருக்குப் போராடிய நிலையில் தவித்தது.

இதனைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக கயத்தாறு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். கயத்தாறு வனச்சரகர் (பொறுப்பு) காந்தி ராஜா தலைமையிலான வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும், செட்டிக்குறிச்சி கால்நடை மருத்துவர் ராஜ் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிய ஆண் மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இறந்து கிடந்த மயில்கள் அங்கேயே பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், மயில்கள் மக்காச்சோள விதைகளை அதிகமாகச் சாப்பிட்டதால், அவற்றுக்கு ஜீரணமாகாமல் இருந்தது. இதையடுத்து மயில்களின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுக்கு பின்னரே, மக்காச்சோள விதைகள் செரிமானமாகாமல் இருந்ததால் மயில்கள் மூச்சுத் திணறி இறந்தனவா அல்லது விஷம் எதுவும் வைக்கப்பட்டு கொல்லப் பட்டனவா என்பது தெரியவரும். இதுகுறித்து கயத்தாறு வனச்சரக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

x