‘நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பினால்...’ - புல்டோசர் நடவடிக்கையில் உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் வகுப்புவாத மோதலுக்குப் பிறகு, இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யோகி ஆதித்யநாத் அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக மறைமுகமாக எச்சரித்துள்ளது.

பஹ்ரைச்சில் நடந்த வகுப்புவாத மோதலை அடுத்து, இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாளை மறுநாள் விசாரணைக்கு முன்பு இடிப்பு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்தரப்பிரதேச அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் ரிஸ்கை எடுக்க விரும்பினால், அது மாநில அரசின் "தேர்வு" என்று நீதிமன்றம் கூறியது. ஆனாலும், 'புல்டோசர் நீதி' வழக்கின் உத்தரவுகளின்படி, கட்டமைப்புகள் சட்டவிரோதமாக இருந்தால் இடிப்பு நடவடிக்கையில் தலையிட மாட்டோம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு. சிங், அக்டோபர் 13 வன்முறையில் ஒருவர் பலியான நிலையில் உள்ளூர் அதிகாரிகள் இடிப்பு நோட்டீஸ் அனுப்பியதாகவும், மூன்று நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் இடிப்பு நோட்டீஸ்களுக்கு பதில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டித்து, பதில்களை பரிசீலித்து முடிவு செய்யுமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், நாளை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

இன்று இதுகுறித்து உத்தரவிட்ட நீதிபதி கவாய், "எங்கள் உத்தரவை மீறும் அபாயத்தை அவர்கள் (உபி அதிகாரிகள்) எடுக்க விரும்பினால், அது அவர்களின் விருப்பம்" என்று கூறினார். இடிப்பு நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக நீதிபதி விஸ்வநாதன் கூறினார்.

உச்ச நீதிமன்றம் தற்போது 'புல்டோசர் நீதிக்கு' எதிரான மனுக்களை விசாரித்து வருகிறது. குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சொத்துக்களை இடிப்பதை ‘புல்டோசர் நீதி’ என குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சொத்து இடிப்புக்கு குற்றம் சாட்டப்படுவது அடிப்படையாக இருக்க முடியாது என்றும், குடிமை விதிகளை மீறினால் மட்டுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் அனுமதியின்றி இடிப்புகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்துள்ளது.

அக்டோபர் 13 ஆம் தேதி, பஹ்ரைச்சின் மஹராஜ்கஞ்சில் துர்கா பூஜை சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, ஒரு மசூதிக்கு அருகில் ஒரு குழு உரத்த இசையை எதிர்த்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இது அப்பகுதியில் தீ வைப்பு மற்றும் வன்முறையாக மாறியது. இந்த மோதலில் ராம் கோபால் மிஸ்ரா (22) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோதலுக்குப் பிறகு பரவிய ஒரு வீடியோவில், மிஸ்ரா ஒரு கூரையிலிருந்து பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவிக் கொடியை வைப்பதைக் காட்டியது.

மிஸ்ராவின் மரணத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகமது ஃபஹீன், முகமது சர்ஃபராஸ், அப்துல் ஹமீத், முகமது தலீம் என்ற சப்லூ மற்றும் முகமது அப்சல் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக மொத்தம் 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 23 நிறுவனங்களுக்கு இடிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமான ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

x