சென்னையில் மதுபோதையில் போலீஸாரை மிரட்டியவர் தோழியுடன் கைது: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்


வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட சந்திரமோகன்

சென்னை: மெரினா உட்புறச் சாலை வழியாக (பட்டினப்பாக்கம் - மெரினா உட்புறச்சாலை) மயிலாப்பூர் காவல் நிலையபோலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் காரை நிறுத்தி, ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற ரோந்து போலீஸார்,அங்கிருந்து செல்லும்படி கூறினர்.

இதனால், ஆத்திரம் அடைந்த இருவரும் போலீஸாரை இழிவாக பேசியதோடு அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால், உஷாரான ரோந்து போலீஸார் இருவரையும் வீடியோ பதிவு செய்தவாறு ‘நீங்கள் யார்?’ என கேட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஜோடி ‘எங்களை வீடியோ எடுக்கிறீர்களா? உன்னால் முடிந்ததை பாரு..

என்னால் காரை எடுக்க முடியாது, உங்க அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் காலி பண்ணி விடுவேன்’ என அந்த நபர் மிரட்டினார். பின்னர், அங்கிருந்து இருவரும் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்த விவகாரம் குறித்து ரோந்து காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அவர் மீது பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின்படி 296பி - பொதுஇடத்தில் ஆபாசமாக பேசுதல், 132 -அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல், 125 - மற்றவர்களின்உயிருக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், 351 (2) மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றவியல் ரீதியாக மிரட்டல்விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

விசாரணையில், அந்த நபர் வேளச்சேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகன்(42) என்பதும், உடனிருந்தது அவரது பெண் தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி(42) என்பதும் தெரியவந்தது. துரைப்பாக்கத்தில் தங்கிஇருந்தபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் ‘‘சம்பவத்தன்று இரவுமெரினா கடற்கரை உட்புற சாலையில் நானும், எனது பெண் தோழியும் காரில்வெளியே சாப்பிட நின்று கொண்டிருந் தோம். அப்போது, போலீஸ் அங்கிருந்த எல்லோரையும் எழுப்பினர்.

மொத்தமாக எழுப்பும்போது எனக்கு கோபம் வந்து வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன். அதிக மதுபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்’’ எனசந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

x