மதுரை: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது செய்யப்பட்டார். காரில் தப்பிக்க முயன்றபோது, ஆந்திர போலீஸார் மடக்கி பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பிரசாத். இவர், கடந்த 2022ல் ஜூன் 6ம் தேதி அப்பகுதியில் நடந்த கலவரத்தின்போது, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அயனவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரி்த்தனர். இவ்வழக்கில் முக்கிய நபரான தீதி தர்மேஷ் சில நாளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேலும், இக்கொலையில் ஆந்திர மாநில ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் பினிபே விஸ்வநாத் என்பரின் 3வது மகன் டாக்டர் பினிபே ஸ்ரீ காந்த் (31) என்பவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை போலீஸார் தேடினர். 2 ஆண்டாக அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், அவர் தமிழகத்திற்கு தப்பி தென்மாவட்ட பகுதியில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஆந்திரா போலீஸார் திருமங்கலம் உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டு அவரை தேடினர். இதற்கிடையில், நேற்று தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அவர் காரில் செல்வதாக அறிந்த ஆந்திர போலீஸார் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கண்காணித்தனர். இரவு சுமார் 9 மணிக்கு மதுரை அருகே எலியார்பத்தி சுங்கச்சாவடி பக்கத்தில் வைத்து அவரது காரை போலீஸார் மடக்கினர்.
காரில் பயணித்த பினிபே ஸ்ரீகாந்தை பிடித்தனர். பின்னர் அவரை கூடக்கோயில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திருமங்கலம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய பிறகு ஆந்திராவுக்கு காரில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆந்திராவுக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்குள்ள மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டு ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லலாம் எனக்கூறி, அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை அரசு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் ஆந்திராவுக்கு இன்று காலை காரில் அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.