மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரை திரும்ப பெறக்கோரி ஆய்வாளர் மிரட்டுவதாகச் சொல்லி ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரி. இவர் இன்று மதுரை ஆட்சியரிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: 'நானும், எனது கணவர் ரமேசும் 12 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தோம். எங்களுக்கு 12 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9-ம் தேதி எங்களது வீட்டுக்கு டீ சர்ட் அணிந்த இருவர் வந்தனர். அவர்கள் எனது கணவர் பற்றி விசாரித்தனர். கணவரை பற்றி விசாரிக்க, நீங்கள் யார் என, கேட்டபோது, அவர்கள் தகாத வார்த்தையால் பேசியதுடன், என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தனர். எனது வயிற்றிலும் தாக்கினர்.
சிறிது நேரத்தில் போலீஸ் உடையில் வந்த ஜெயா என்ற பெண் என்னை ஆட்டோவில் ஏற்றி தெற்குவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் செய்தேன்.
இந்நிலையில், காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரை திரும்பப் பெறவேண்டும். இல்லையெனில் என்னையும் என் கணவரையும் வழக்கில் சிக்க வைப்போம் என, தெற்குவாசல் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தொடர்ந்து எங்களை மிரட்டுகிறார். ஆகவே, ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் டீசர்ட் அணிந்து வந்து வீட்டில் என்னை மிரட்டிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.' இவ்வாறு அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.