கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது: புழல் மத்திய சிறையில் பரபரப்பு


செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக ஆனந்தன் என்ற கல்லறை ஜான்அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பார்வையாளர் நேரத்தின்போது அவரைப் பார்க்க சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி (26) சிறைக்கு வந்தார்.

அப்போது, வீடியோ காலில்பேசுவதற்காக கைதி ஆனந்தனிடம், வழக்கறிஞர் பிரியதர்ஷினி தனது செல்போனை கொடுத்துள்ளார். இதை கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் அறிந்த சிறைக் காவலர்கள், அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வழக்கறிஞர் பிரியதர்ஷினியை கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கஞ்சா பறிமுதல்: புழல் மத்திய சிறையின்விசாரணை பிரிவில் நேற்று முன்தினம் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,கஞ்சா வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 10-ம்தேதி சிறையில் அடைக்கப்பட்ட குடியாத்தம் இம்ரான் என்பவர்,தனது ஆடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சாவை சிறைத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

x