வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் மூலம் ரூ.2.03 கோடி மோசடி: மேலாளர், பெண் துணை மேலாளர் கைது


கைது செய்யப்பட்ட மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி

சிவகங்கை: கல்லல் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 533 பவுன் நகைகள் மூலம் ரூ.2.03 கோடி மோசடி செய்த மேலாளர், பெண் துணை மேலாளரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லலில் தனியார் வங்கியில் (ஐசிஐசிஐ) மேலாளராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோட்டைகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ் (34) பணிபுரிகிறார். துணை மேலாளராக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயைச் சேர்ந்த ராஜாத்தி (38) உள்ளார்.

சமீபத்தில் இவ்வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் (49) ஆய்வு செய்தார். அப்போது அடகு நகைகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் வங்கி மேலாளர், துணை மேலாளர் இணைந்து 37 பேர் அடகு வைத்த 533 நகைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்துள்ளனர். மேலும், வெளியே எடுத்த அசல் நகைகளை தங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் மீண்டும் அதே வங்கியில் அடகு வைத்து பணம் எடுத்துள்ளனர்.

பின்னர் அடகு வைத்த நகை உரிமையாளர்கள் 26 பேர் பணம் செலுத்தி நகைகளை திருப்பியபோது, அவர்களது அசல் நகைகளை திருப்பி கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களிடம் வாங்கிய பணத்தை வங்கி செலுத்தவில்லை.

வாடிக்கையாளர்களுக்கு அசல் நகைகளை கொடுத்ததால், அவர்களுக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதன் மூலம் ரூ.2,03,86,973 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் மன்னவன், உதவி ஆய்வாளர் ஜான் டைட்டர்ஸ் ஆகியோர் வழக்கு பதிந்து வங்கி மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், ராஜாத்தி பணத்தை கொடுத்து வைத்திருந்த ரமேஷ் (48), அவரது மகன் சதீஷ் ( 21) ஆகியோரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, மேலாளர் விக்னேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பணத்தை இழந்துள்ளார். அதற்காக அடகு வைத்த நகைகளில் மோசடி செய்துள்ளார். அதேபோல் துணை மேலாளர் ராஜாத்தி மோசடியாக கிடைத்த பணத்தை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்துள்ளார்.

மேலும், இதுவரை 26 பேர் மீண்டும் பணத்தை செலுத்தி தங்களது அசல் நகைகளை திருப்பி விட்டனர். இன்னும் 11 பேர் தங்களது நகைகளை திருப்பவில்லை. அவரது அசல் நகைகள் வங்கியிலேயே இருப்பதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x