திருத்தணியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கைது


கைதான ரமேஷ்

திருத்தணி: திருத்தணியில், ஏரியில் வண்டல் மண் எடுக்க அளவீடு செய்து தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர் வளத் துறை உதவி செயற்பொறியாளரை வெள்ளிக்கிழமை (அக்.18) மாலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஸ்ரீவிலாசபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர், தன் நிலத்தை மேம்படுத்துவதற்காக ஏரியில் வண்டல் மண் எடுக்க ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஏரியில் வண்டல் மண் எடுக்க அளவீடு செய்து தர, திருத்தணியில் உள்ள நீர் வளத்துறையின் கொசஸ்தலை வடிநிலக் கோட்டத்துக்குட்பட்ட நந்தியாறு வடிநில உப கோட்ட அலுவலகத்தை அணுகியுள்ளார்.

ஆனால், வண்டல் மண் எடுக்க அளவீடு செய்துதர, ரூ 7 ஆயிரத்தை தனக்கு லஞ்சமாக தரவேண்டும் என, நந்தியாறு வடிநில உப கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, உதவி செயற்பொறியாளர் ரமேஷை கையும் களவுமாக பிடிக்க திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின் படி, இன்று மாலை திருத்தணியில் உள்ள நீர் வளத்துறையின் நந்தியாறு வடிநில உப கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ரமேஷிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக விவசாயி ரமேஷ் அளித்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் மாலா உள்ளிட்டோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் ரமேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

x