சிவகங்கையில் ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் நிதி நிறுவன இயக்குநர் கைது


கைதான மாதவன்

சிவகங்கை: தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை முறைகேடு செய்த வழக்கில், அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவரை சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு நியூ ரெய்ஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தி முதலீடுகளை பெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் ரூ.400 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தப்படி முதிர்வுத் தொகையை தராமல் அந்நிறுவனம் முறைகேடு செய்ததாக 2022-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இது குறித்து அந்நிறுவன இயக்குநர்கள் ராஜா, மாதவன், மகேந்திரன், சுரேஷ் உட்பட 49 பேர் மீது சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஏற்கெனவே சிலரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த இயக்குநர்களில் ஒருவரான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த மாதவன் (37) என்பவரை டிஎஸ்பி மணிமாறன், ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.

x