மதுரையில் ‘ஆயுர்வேத க்ளினிக்’ பெயரில் பாலியல் தொழில்: பெண் உட்பட இருவர் கைது


மதுரை: மதுரையில், ‘ஆயுர்வேத கிளினிக்’ என்ற பெயரில் பாலியல் தொழில் புரிந்த விருதுநகர் பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாநகரில் ‘ஸ்பா’, மகளிர் அழகு நிலையம் என்ற பெயர்களில் பாலியல் தொழில் புரிவதை தடுக்க, மகளிர் மற்றும் பெண்
குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது போன்ற குற்றச்செயலை தடுக்க, தொடர் கண்காணிப்பிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மதுரை கோமதிபுரம் மருதுபாண்டியர் தெருவிலுள்ள ஒரு வீட்டில் ‘ஆயுர்வேத கிளினிக்’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றம், விபசாரச் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

தொடர்ந்து அந்த கிளினிக்கின் தொலைபேசி எண்ணில் நோயாளிகள் போன்று பேசிய போலீஸார், சிகிச்சைக்குச் செல்வது போல் உள்ளே சென்றனர். அப்போது, அங்கு தனித்தனி அறையில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது. அங்கு பணியில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த மேலாளர் செல்வராணி, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஊழியர் பிரபாகரன் ஆகியோரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்வதும், இதற்காகவே ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து, அவர்களை அவனியாபுரம் பகுதியில் தனி வீட்டில் தங்கவைத்து பாலியல் தொழிலில் அவர் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்வராணி (30), பிரபாகரன் (25) ஆகிய இருவரையும் அண்ணாநகர் போலீஸார் கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகின்றனர். ஏற்கெனவே எஸ்.எஸ்.காலனி பகுதியில் சட்டவிரோதமாக மணிகண்டன் ‘ஸ்பா’ நடத்தி கைதானவர் என போலீஸார் தெரிவித்தனர்.

x