கல்லூரி முதல்வருக்கு பாலியல் தொல்லை: கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளருக்கு முன்ஜாமீன் மறுப்பு


மதுரை: கல்லூரி முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரையில் தனியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஒருவர், சென்னை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ராம கிருஷ்ணன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அப்புகாரில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக பணிபுரிந்த போது பணி நிமித்தமாக ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். அப்போது என்னை அவர் தகாத வார்த்தைகளில் பேசினார்.

தன்னை சென்னைக்கு தனியாக வரவேண்டும். தனக்கு ஒத்துழைப்பு அளித்தால் கல்வித்துறையில் உயர்ந்த பதவிகளை பெற்றுத்தருவதாக அவர் கூறினார். எனது புகைப்படத்தையும் தவறாக சித்தரித்து வைத்துள்ளார். இதை கண்டித்தால் என்னை மிரட்டினார் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி முதல்வர் தரப்பில், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணனின் வாட்ஸ்-அப் பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதி, “வாட்ஸ்-அப் பதிவுகளை பார்க்கும் போது பல்கலைக்கழக பதிவாளர் ஒருவர் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. இதை ஏற்க முடியாது. ஒரு கல்லூரி முதல்வரை தனியே வந்து பாருங்கள். கணவரை அழைத்து வராதீர்கள் என்று ஏன் கூற வேண்டும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

பின்னர் மனுதாரர் தரப்பில், முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

x