காவல்நிலைய சித்திரவதையில் பழங்குடியின இளைஞர் மரணம்: 5 போலீஸார் கைது


அகர்தலா: திரிபுராவில் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளான 34 வயது பழங்குடியின நபர் உயிரிழந்ததை அடுத்து, 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சப்ரூமில் வசிக்கும் பாதல் மற்றும் மற்றொரு பழங்குடியினரான சிரஞ்சித் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரப்பர் ஷீட்களை திருடியதாக பிடிபட்டனர். அவர்களை போலீசார் பிடித்து சென்றனர், ஆனால் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் ஒரு நாள் கழித்து போலீஸார் அவர்களை கைது செய்தனர், ஆனால் அடுத்த நாள் பாதல் விடுவிக்கப்பட்டார்.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் தெரிவித்ததால், முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சாந்திர் பஜார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அன்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவர் தனது வீட்டில் இறந்தார்.

பாதலின் உடலில் கண்களைச் சுற்றிலும் காயங்கள் இருந்தன. ஆனால் இவை எப்போது ஏற்படுத்தப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. காவலில் இருந்த பாதலை போலீஸார் சித்திரவதை செய்ததாக அவரது குடும்பத்தினர் புதன்கிழமை போலீஸில் புகார் அளித்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர் பெண்கள் உட்பட மக்கள் மனுபஜார் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் அகர்தலா-சப்ரூம் தேசிய நெடுஞ்சாலையையும் மறித்து, போக்குவரத்தை நிறுத்தினர். பாதலின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நபரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய, நிர்வாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய தெற்கு திரிபுராவின் காவல் கண்காணிப்பாளர் அசோக் சின்ஹா, “மனுபஜார் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஜித் ரே மற்றும் கான்ஸ்டபிள் ராஜ்குமார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிரேம்ஜித் ரே மற்றும் ராஜ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஐந்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவலில் வைக்கப்பட்ட சித்திரவதைக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்” என அவர் கூறினார்

ஆர்.கே.பூர் மற்றும் நூதன் பஜார் காவல்நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் இது மூன்றாவது காவல் நிலைய மரணம் என்று கூறப்படுகிறது.

x