புதுச்சேரியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர் உட்பட நால்வர் கைது


புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவரையும் சிறார் மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15ம் தேதி இருசக்கர வாகனத்தில் மும்பையைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி தனது தோழியுடன் செல்போனில் கூகுள் மேப்பை பார்த்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அப்பெண் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், பைக் எண்களை வைத்தும், செல்போன் டவர் லொக்கேஷனை கொண்டும் செல்போன் பறிப்பு நபர்களை அடையாளம் கண்ட போலீஸார், அவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.

இந்நிலையில் நேற்று புஸ்ஸி வீதி - துமாஸ் வீதி சந்திப்பில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திண்டிவனம் விட்டாலபுரம் அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்த பாலிடெக்னின் மாணவர் கோகுலகிருஷ்ணராஜ் (20) மற்றும் மூன்று சிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மும்பை பெண்ணிடம் செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இது சம்பந்தமாக எஸ்பி லட்சுமி சவுஜன்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கோகுலகிருஷ்ணராஜ், தெள்ளார் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுமுறை தினங்களில் திண்டிவனத்தில் தனது உறவினரின் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சர்வீஸூக்காக வரும் சில செல்போன்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் செல்போன்களை திருடி அதன் மூலம் உதிரிபாகங்களை எடுத்து விற்பனை செய்யலாம் என்றும், நல்ல செல்போன்களை விலைக்கு விற்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அதே பகுதியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும் தனது நண்பர்களான 3 சிறார்களுடன் பைக்கில் புதுச்சேரி வந்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்" என்று லட்சுமி சவுஜன்யா கூறினார்.

இதையடுத்து, 4 பேரிடம் இருந்தும் 3 செல்போன்கள், 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸார், அவர்கள் நால்வரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கோகுலகிருஷ்ணராஜ் காலாப்பட்டு மத்திய சிறையிலும் 3 சிறார்கள் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

x