மைசூருவில் உள்ள முடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: சித்தராமையாவுக்கு சிக்கல்


மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பெயரும் சம்பந்தப்பட்டுள்ள நில மோசடி வழக்கு தொடர்பாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழு இன்று சோதனை நடத்தியது. ஆணையர் ஏ.என்.ரகுநந்தன் உள்ளிட்ட முடா உயர் அதிகாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவார்கள் என தெரிகிறது. நில ஒதுக்கீடு வழக்கில் அவர்களின் தொடர்பைக் கண்டறிய முடா அதிகாரிகள் அனைவரையும் அமலாக்கத்துறை விசாரிக்கும் என தெரிகிறது.

சித்தராமையாவுக்கு நெருக்கமானவரான மாரிகவுடா, முடா தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியுள்ளது. ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாரிகவுடா, "நான் அமைச்சரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். முதல்வர் என்னை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினார், அவரது வழிகாட்டுதலின்படி நான் ராஜினாமா செய்தேன்.

ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் மீது எந்த அழுத்தமும் இல்லை. என் உடல்நிலை சரியில்லை, அதனால் தானாக முன்வந்து பதவி விலகுகிறேன். முதல்வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். நான் இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், எனவே இனியும் என்னால் பணியில் தொடர முடியாது" என்று அவர் கூறினார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இது பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், முதலமைச்சரின் மனைவி 14 மனைகளையும் முடாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளார். எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றன.

x