சென்னை | நேபாள சிறுவர்கள் மீது தாக்குதல்: ஓட்டல் உரிமையாளர் கைது


சென்னை: நேபாள சிறுவர்களை தாக்கியதாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலஓட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் பிற ஊழியர்களுடன் அங்கேயே தங்கி பணி செய்கின்றனர். இந்நிலையில், அந்த சிறுவர்கள் 3 பேரும் தங்கள் நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து தங்கவைத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஓட்டல் உரிமையாளர் மகாலிங்கம் (42). சம்பந்தப்பட்ட சிறுவர்களை கண்டித்து, தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் தமிழரசன் (46), ஃபிரைடு ரைஸ் மாஸ்டர் நாகப்பன் (27) ஆகியோரும் தாக்கினராம். இதில் காயம்அடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸார் விரைந்து விசாரித்தனர். இதில், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டல் உரிமையாளர் மகாலிங்கம் உட்பட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

x