நியோமேக்ஸ் சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன்? - ஐகோர்ட் கேள்வி


மதுரை: நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி, நிலம் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், நியோமேக்ஸ் இயக்குநர்களான கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன், உட்பட பலரை கைது செய்தனர். இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், நியோமேக்ஸ் மோசடியில் சார்லஸ், இளையராஜா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஜெயின்குமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மோசடியில் தேடப்பட்டு வரும் செந்தில் வேலு என்பவர் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று விசாரித்தார். அப்போது, "வழக்கு தொடர்பாக எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என அவர் கேள்வி எழுப்பினர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில், "இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. ஆகவே, கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, "இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதை தாமதிக்க காரணம் என்ன? இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. அக்டோபர் 19ம் தேதிக்குள் நியோமேக்ஸ் சொத்துக்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என எச்சரித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

x