மீஞ்சூரில் விபத்தால் ஏற்பட்ட தகராறு: கல்லால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு


பொன்னேரி: மீஞ்சூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட தகராறில், கல்லால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேஷனரி உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் - அரியன்வாயல், அபுல்கலாம் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சையது உசேன் (40). இவர், மீஞ்சூர் மார்க்கெட் பகுதியில் ஸ்டேஷனரி ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், சையது உசேன் வழக்கம் போல் கடந்த 14ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, தனது சித்தப்பா கரீமுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் பெருமாள் கோயில் தெருவில், ஆஞ்சநேயர் கோயில் எதிரே சென்ற போது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும், சையது உசேனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில், சையது உசேனுக்கும், எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு முற்றியதன் விளைவாக, அடையாளம் தெரியாத நபர் அருகில் கிடந்த கல்லால் சையது உசேனை தாக்கியுள்ளார். இதில், நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த சையது உசேன், 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சையது உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மீஞ்சூர் போலீஸார், சையது உசேன் உயிரிழப்புக்கு காரணமான அடையாளம் தெரியாத நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

x