மத்திய பிரதேசம்: போபாலில் பிரபலமாக "டிஜே" என்று அழைக்கப்படும் ஒலிபெருக்கியின் மிக சத்தமான இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான்.
உள்ளூர் திருவிழா கொண்டாட்டத்தின் போது 13 வயது சிறுவன் சமர் பில்லோர், தனது வீட்டிற்கு வெளியே டிஜே சத்தம் கேட்டு குதூகலமானான். வீட்டிற்கு வெளியே மக்கள் நடனமாட, சமர் அந்த உரத்த இசையால் ஈர்க்கப்பட்டு கூட்டத்தோடு சேர்ந்து நடனமாடினான். ஆனால், கொண்டாட்டத்தின் போது அச்சிறுவன் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவரது தாயார் ஜமுனா தேவி உதவி கோரி கதறியழுதார். மேலும், "என் மகனுக்கு இதய நோய் இருந்தது, ஆனால் அவன் நன்றாகவே இருந்தான்" என்று அவர் கூறினார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அச்சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சமரின் தந்தை கைலாஷ் பில்லோர், “டிஜேயின் சத்தம் ஆபத்தான சத்தமாக இருந்தது. எத்தனையோ எச்சரித்தும், அச்சத்தத்தை அவர்கள் நிறுத்தவில்லை. எங்கள் மகனின் உயிர் போனாலும், அந்த சத்தத்தை யாராலும் தடுக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.
சமீபத்தில் கெளதம் நகர், ஜம்பூரி மைதானம், ஜஹாங்கிராபாத் மற்றும் கோவிந்த்புரா போன்ற பகுதிகளில் டிஜேக்களின் ஒலி அளவு 90 முதல் 100 டெசிபல்கள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபலுக்கும், இரவில் 45 டெசிபலுக்கும் அதிகமாக ஒலி அளவு இருக்கக்கூடாது என விதிகள் தெளிவாக கூறுகின்றன. அமைதியான மண்டலங்களில், பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் மட்டுமே ஒலி அளவு இருக்க வேண்டும்.
இதுகுறித்து பேசிய இதயநோய் நிபுணர் கிஸ்லே ஸ்ரீவஸ்தவா, டிஜேக்களின் உரத்த சத்தம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பைத் தூண்டி, மரணத்துக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.