மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் 


மும்பை: தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அந்த நபருக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையிலான தகராறு காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

17 வயது மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தானேவின் மும்ப்ரா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் கைது செய்யப்பட்ட அந்த நபர் ஒரு வருடமாக சிறையில் உள்ளார். முன்னதாக அவரும் அவரது முன்னாள் மனைவியும் பரஸ்பர சம்மதத்துடன் ஒருவரையொருவர் விவாகரத்து செய்தனர். மேலும் அவர் மறுமணம் செய்து கொண்ட பிறகு, அவர்களுக்கு இடையே நிதி கருத்து வேறுபாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

அந்த நபருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் முகமது ஜைன் கான், இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், இருவருக்குமான முரண்பாட்டால் உருவானவை என்றும் வாதிட்டார். மேலும், மருத்துவ பரிசோதனையின் போது மாஜிஸ்திரேட் முன்பு அளிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

பரஸ்பர ஒப்புதலின் மூலம் விவாகரத்து பெற்ற பின்னர், அவருக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையேயான நிதி தகராறுகள் காரணமாக எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது என்று கூறினார்.

அரசு தரப்பும் ஜாமீனை எதிர்த்தது, ஆனால் நீதிபதி மணீஷ் பிடலே வழக்கில் உள்ள முரண்பாடுகளை எடுத்துரைத்தார். "2021 இல் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட பெண் 2023 ஆம் ஆண்டில் தனது தந்தை மறுமணம் செய்து கொண்ட பிறகு அவருடன் தங்கியிருக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தன் தந்தையிடம் திரும்பியதற்கான காரணத்தையும், முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அதை அனுமதிப்பதற்கான அவரது தாயின் முடிவையும் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

x