சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன்: திருமணம் செய்வதாக உறுதியளித்ததால் தீர்ப்பு


உத்தரப் பிரதேசம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், அவருக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்ததால் நீதிமன்ற இத்தீர்ப்பை வழங்கியது.

சஹாரன்பூர் மாவட்டத்தின் சில்கானா காவல் நிலைய பகுதியில் 15 வயது நிரம்பிய சிறுமியை ஏமாற்றி திருமணம் கொள்வதாக கூறி, அவரை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி கர்ப்பமானார். இதன்பின்னர் அந்த அச்சிறுமியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதையடுத்து, சஹாரன்பூர் மாவட்டத்தின் சில்கானா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமி மைனர் இல்லை என்றும், அவருக்கு 18 வயது என்றும் கூறினார். மேலும், விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், அவருக்கு பிறந்த பெண் குழந்தையைப் பார்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தான் சிறையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து ​​நீதிபதி கிரிஷன் பஹல், குழந்தையின் பெயரில் திறக்கப்படும் வைப்புத்தொகைக்கு ரூ.2 லட்சம் செலுத்துமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். மேலும், இளம் பருவத்தினர் உறவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நுணுக்கமான அணுகுமுறை தேவை என்று கூறினார்.

x