சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை - ரூ.1 லட்சம் பறிமுதல்


சிவகாசி: சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 680 பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி அருகே ஆணையூரில் சார்பு நீதிமன்றம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின் அலுவலர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பூமிநாதன் தலைமையிலான போலீஸார் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயனிடம் புரோக்கர்கள் கொடுத்த பணம் ரூ.1 லட்சத்து 680 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் புரோக்கர்கள் கோவிந்தன், மாரிச் செல்வம், வெங்கடேஷ், லட்சுமணன், பெருமாள், செல்வம் உட்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் அரசு அதிகாரிகள் பணம் மற்றும் பரிசு பொருட்களை பெறுவதை கண்காணிக்கும் வகையில் நடைபெற்ற சோதனையில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x