கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அதிர்ச்சி


கோவை விமான நிலையம்

கோவை: கோவை விமான நிலையத்துக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் அதிகபட்சமாக 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரம் பேர் பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னைக்கு அடுத்து பெரிய விமான நிலையமாக கோவை செயல்படுகிறது. சுற்றுப்புற ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. இந்நிலையில் இ-மெயில் மூலம் கடந்த சில நாட்களாக கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன் கோவையில் இருந்து சென்னை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனை செய்த பின் அது புரளி என தெரியவந்த நிலையில், இன்று காலை மீண்டும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் பெறப்பட்டது. இதையடுத்து விமான நிலைய வளாகம் முழுவதும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள், போலீஸார் இரண்டு மணி நேரம் தீவிர சோதனை நடத்திய பின் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

x