தசரா விழாவில் பழங்குடியின இளைஞர் மீது தாக்குதல்: பாஜக எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு


சத்தீஸ்கர்: பெமேதரா மாவட்டத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது பழங்குடியின இளைஞரை தாக்கியதாக, சத்தீஸ்கரில் ஆளும் பாஜக எம்எல்ஏ ஈஸ்வர் சாஹுவின் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அக்டோபர் 13 ஆம் தேதி சாஜா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள செச்சன்மேட்டா கிராமத்தில் நடந்தது. தசரா விழாவின்போது சாஜா சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வர் சாஹுவின் மகன் கிருஷ்ணா சாஹு மற்றும் ராகுல் துருவ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது துருவின் நண்பர் மணீஷ் மாண்டவி (18), இந்த சண்டையை விலக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சாஹுவும் அவரது எட்டு முதல் ஒன்பது நண்பர்களும் மாண்டவியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் மாண்டவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மணீஷ் மாண்டவி அளித்த புகாரை தொடர்ந்து கிருஷ்ணா சாஹு மற்றும் அவரின் நண்பர்கள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையில், அப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி சமாஜத்தை சேர்ந்தவர்கள், காவல்துறை இந்த வழக்கை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபரை சமரசம் செய்ய அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் போலீசார் காலதாமதம் செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

x