சத்தீஸ்கரில் வளர்ச்சி பணிகளை தடுக்கும் பேய்? - எலுமிச்சையை வெட்ட சொல்லும் பாஜக எம்.பி!


சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் மூடநம்பிக்கை தலைதூக்கியுள்ளது. காங்கரைச் சேர்ந்த பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக், "எலுமிச்சை பழத்தை வெட்டினால் வளர்ச்சிப் பணிகள் விரைவுபடுத்தப்படும்” என்று கூறியது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

​​காங்கர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யான போஜ்ராஜ் நாக், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசாங்கத் திட்டங்களில் நிலவும் சிக்கல்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘இதை நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அலட்சியத்தால் சிலர் நாசப்படுத்துகின்றனர். இனியும் அவர்கள் இதற்கு செவிசாய்க்காவிட்டால், அவர்களின் பெயரில் எலுமிச்சை பழம் வெட்டப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் " என தெரிவித்துள்ளார்.

போஜ்ராஜ் நாக்கின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், "எந்த ஒரு பொதுமக்கள் பிரதிநிதியும் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது துரதிர்ஷ்டவசமானது. பாரதிய ஜனதா கட்சிக்குள் மூடநம்பிக்கை ஆழமாக உள்ளது. கொரோனாவை விரட்ட மக்கள் கை தட்டுங்கள் என்று பிரதமரே சொன்னார் என்றால், இயற்கையாகவே அவரை பின்பற்றுபவர்கள் இதே போன்ற நம்பிக்கைகளைத்தான் எதிரொலிப்பார்கள்” என்றார்

அந்தஷ்ரத்தா நிர்முலான் சமிதியின் தலைவர் டாக்டர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக மாநிலத்தில் மூடநம்பிக்கை சம்பவங்கள் அதிகம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சுகாதாரம் மற்றும் அறிவியல் குறித்த விழிப்புணர்வு அவசியம். பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்கும் தார்மீக கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. வளர்ச்சிக்கு தடையாக எந்த மந்திரமோ, பேயோ இல்லை. ஒருவேளை பேய்கள் இருந்திருந்தால், அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்வார்கள், மேலும் மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்" என்றார்

மூடநம்பிக்கையின் காரணமாக சத்தீஸ்கர் மாநிலம் சமீபத்தில் கொடூரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று, சுக்மா மாவட்டத்தில் உள்ள எட்கல் கிராமத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் மௌசம் புச்சா மற்றும் அவரது குடும்பத்தினர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். புச்சா குடும்பத்தினர் சூனியம் செய்வதாக நம்பி குற்றவாளிகள் அவர்களை கொன்றனர்.

இதேபோல், பலோடபஜார்-படாபராவில், செப்டம்பர் 12 அன்று சார்ச்ட் கிராமத்தில் உள்ள ராம்நாத் பாட்லேவின் குடும்பத்தின் குழந்தை நோய்வாய்ப்பட்டது. அவரது குடும்பத்தினர் தங்கள் பக்கத்து வீட்டு சைத்ரம் குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு சூனியம் செய்து விட்டதாக சந்தேகித்து, சைத்ரம் மற்றும் 11 மாத குழந்தை உட்பட மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொடூரமாகக் கொன்றனர்.

அக்டோபர் 5 ஆம் தேதி, ராய்பூருக்கு அருகிலுள்ள நின்வா கிராமத்தில், 55 வயதான புவனேஷ்வர் யாதவ், உள்ளூர் ஆலயத்தில் சுய தியாகம் செய்வதாக தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். மே மாதம், பால்ராம்பூரில் 26 வயதுடைய நபர் ஒருவர் தனது மூத்த மகனை ஒரு தெய்வத்தை திருப்திப்படுத்துவதற்காக கொலை செய்ததார். ஏப்ரல் மாதம், கொரியா மாவட்டத்தில் நரபலி சடங்கின் ஒரு பகுதியாக தங்கள் மருமகனைக் கொன்றனர்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2024 வரை, சத்தீஸ்கரில் மூடநம்பிக்கை தொடர்பான 54 கொலைகள் நடந்துள்ளன. மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், மூடநம்பிக்கைகளால் 200 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. 2021 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மாந்திரீக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

x