தமிழகம், புதுச்சேரியில் பைக்குகளை திருடி கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த 4 பேர் கைது 


புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு எல்லை பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு நிலை சப்இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீஸார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் பைக்கில் வந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் புதுநகரை சேர்ந்த ஹரி (எ) அரவிந்த் (23), புதுச்சேரி திலாஸ்பேட் வீமன் நகரைச் சேர்ந்த விஜய் (எ) முட்டை விஜய் (19) என்பது தெரிந்தது.

மேலும் அவர்கள் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் குழுக்களாக செயல்பட்டு பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோயில் உண்டியல், வீடு, கடைகளை உடைத்தும் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து புதுச்சேரி சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பி வீரவல்லபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்தது. அதே நேரத்தில் உண்டியல் திருட்டும் நடந்து வந்தது.

இதையடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கோரிமேடு எல்லையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த ஹரி, விஜய் ஆகிய இருவரை பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களான கடலூரை சேர்ந்த ஜெகன் (எ) ஜெகதீஷ்வரன் (27), எலி விக்னேஷ் (எ) விக்னேஷ் (20), ஆகாஷ், சந்தோஷ். சுகன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வினோத் ஆகியோருடன் சேர்ந்து குழுக்களாக செயல்பட்டு தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் திருடிய பைக்குகளை வீலிங் செய்ய பயன்படுத்தியுள்ளனர். அதோடு பைக் பாகங்களை பிரித்து எடுத்து விற்கவும் முயற்சித்துள்ளனர். இதுமட்டுமின்றி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கோயில் உண்டியல், வீடு, கடைகளை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் 4 கோயில்களில் உண்டியலை உடைத்துள்ளனர். 3 கோயில்களில் சாமி நகைகளை திருடியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 14 திருட்டு பைக்குகள், ஒன்றரை பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி நகை என ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செயப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 பேர் ஈடுபட்ட நிலையில் மேலும் ஜெகன் (எ)ஜெகதீஷ்வரன் (27), எலி விக்னேஷ் (எ) விக்னேஷ் (20) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை தேடி வருகின்றோம். என்றனர். பின்னர் நான்கு பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட கோரிமேடு போலீஸாரை டிஜிபி ஷாலினி சிங் பாராட்டினார்.

x