உத்தராகண்ட்: உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து கிடந்ததை ரயிலின் லோகோ பைலட்டுகள் கண்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை டேராடூன்-தனக்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் காதிமா ரயில் நிலையத்தை கடந்தபோது, லோகோ பைலட்டுகள் ரயில் பாதையில் 15 மீட்டர் நீளமுள்ள உயர் அழுத்த மின் கம்பி கிடப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, தண்டவாளத்தில் இருந்த மின் கம்பியை அகற்றினார்கள். இதனையடுத்து அந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் உத்தரகண்ட் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு செப்டம்பரில், பிரயாக்ராஜில் இருந்து பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக அப்போது பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.