கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கைதான 8 பேரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை


கோப்புப் படம்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 24 பேரில் முதற்கட்டமாக கன்னுகுட்டி என்கின்ற கோவிந்தராஜ் உட்பட 8 நபர்களிடம் ஒரு நபர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் நச்சுக் கலந்த விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து 24 பேரை கைதுசெய்துள்ளனர்.இதில் 18 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஒரு நபர் ஆணையம் நச்சுக் கலந்த சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஒரு நபர் ஆணையம் விசாரணை முடிவற்ற நிலையில்,சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரிடமும் விசாரணை செய்ய ஒரு நபர் ஆணையம் முடிவு செய்து 24 பேருக்கும் சம்மன் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து, நேற்று முதற்கட்டமாக கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ், தாமோதரன், சின்னதுரை, கண்ணன், ஜோசப் ராஜா, மாதேஷ், சாகுல் ஹமீது உள்ளிட்ட 7 பேரையும் கடலூர் மத்திய சிறையில் இருந்தும், கண்ணு குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மனைவி விஜயாவை வேலூர் சிறையிலிருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு நபர் ஆணைய அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர், தொடர்ந்து அவர்களிடம் நச்சுக் கலந்த கள்ளச்சாராயம் குறித்து தனித்தனியாக, ஒரு நபர் ஆணைய தலைவர் கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார், இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 16 பேரிடமும் இன்றும், நாளையும் விசாரணை நடைபெறும் எனவும் ஒரு நபர் ஆணையத்தின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x