நிலத்தை சப் டிவிசன் செய்ய ரூ.10,000 லஞ்சம்: சேவூர் நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்


அவிநாசி: நிலத்தை சப் டிவிசன் செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற, சேவூர் நில அளவையரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

அவிநாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் திருப்பூர் அவிநாசி சாலை பங்களா பேருந்து நிறுத்தம் அருகே பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக அவிநாசி ராமநாதபுரத்தில் சொந்தமாக 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பதிவு செய்து, பட்டா பெறுவதற்காக சப் டிவிசன் செய்ய முயன்றார். இதற்காக சேவூர் நில அளவையர் காளியப்பன் (54) என்பவரை அணுகி உள்ளார். இதையடுத்து அவர் கடந்த 10-ம் தேதி அவர் நிலத்தை அளந்து தந்துள்ளார்.

தொடர்ந்து சப் டிவிசன் செய்துதர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார் காளியப்பன். இதனை விரும்பாத மணிகண்டன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். 3 நாட்கள் அலுவலக விடுப்புக்கு பிறகு, சேவூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு காளியப்பன் வந்துள்ளார். அப்போது மணிகண்டன், காளியப்பன் கேட்ட ரூ.10 ஆயிரத்தை, கொடுத்துள்ளார். இதனை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக பிடித்து காளியப்பனை கைது செய்தனர்.

x