திருப்பூரில் ‘ஆயுதபூஜை’ நடைபாதை கடைகளில் பணம் வசூல்? - ஆடியோ வைரல்


திருப்பூர் மாநகராட்சி (கோப்புப் படம்)

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் ஆயுதபூஜைக்கு போடப்பட்ட நடைபாதை கடைகளால், மாநகராட்சி அதிகாரிகள் பணம் வசூலித்ததாக வெளியான ஆடியோவால், திருப்பூரில் இன்று (அக். 12) பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆயுத பூஜையை ஒட்டி நடைபாதை கடைகள் ஏராளமானவை போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கடைகளில் அதிகாரிகள் பணம் பெற சொல்வதாக கூறி, ஆடியோ ஒன்று இன்று வெளியானது. ஒரு கடைக்கு ரூ.100 வசூலிப்பதாகவும், ஒருவரே 3 கடை போட்டிருந்தால் அவர்களிடம் தலா ஒரு கடைக்கு ரூ.150 வசூலிப்பதாகவும், மாநகராட்சி சார்பில் பணம் வசூலித்த பெண் ஒருவர் பேசிய ஆடியோ வெளியானது. அந்த பெண்ணின் எதிர்முனையில் பேசியவர், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் யார் பணம் பெற சொன்னது என, அந்த பெண்ணிடம் துருவித்துருவி கேட்கவே, அந்த பெண் ஒருவர் பெயரை சொல்லி, அலுவலகத்தில் இருந்து தான் பணம் பெற சொன்னார்கள். நீங்கள் யார் என்று கேட்கவே? அதற்கும் பதில் சொல்லாமல் அந்த ஆடியோ துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் சரவணன் கூறும்போது, “நடைபாதை வியாபாரிகளிடம் வசூலிக்க எந்த அதிகாரி சொல்லியது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நடைபாதை கடைக்கும் தொகை நிர்ணயித்து பணம் வசூலித்துள்ளனர். யார் என்று தெரியவில்லை. ஒரு கடைக்கு ரூ.100, ரூ.150 வரை வசூலித்துள்ளனர். யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ஆயுதபூஜைக்கு நடைபாதை கடை வியாபாரிகளிடம், ஆண்டுதோறும் பணம் வசூலிப்பது நடைபெறும். தற்போது இது தொடர்பாக ஆடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நாளை (அக். 13) நடைபெறும் சங்க கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, புகார் அளிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

x