கரூர்: குளித்தலை அருகே மாமனார் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டது தொடர்பாக மருமகனை குளித்தலை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருங்களாப்பள்ளியைச் சேர்ந்தவர் ஞானகுரு (60). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவர் மகள் தவமணி. மருமகன் ராஜேந்திரன் (36). இவர் கொத்தனாராக பணி புரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த தவமணி தந்தை வீட்டருகே தனியாக வீடெடுத்து வசித்து வந்துள்ளார். இன்று (அக். 12ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு மதுபோதையில் ஞானகுருவின் வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் தன் மனைவி தவமணியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு ஞானகுருவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளர்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானகுருவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஞானகுருவை அப்பகுதியினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து ஞானகுரு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை கைது செய்தனர்.