உத்தரப் பிரதேசம்: காசியாபாத்தில் கைவிடப்பட்ட நிலையில் புதர்களில் கிடந்த புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை உள்ளூர் காவல்துறை அதிகாரி தத்தெடுத்தார்.
காசியாபாத்தில் உள்ள புதர் பகுதியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங் தலைமையிலான துதியா பீப்பல் போலீஸ் அவுட்போஸ்ட் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, அங்கே கிடந்த புதிதாக பிறந்த பெண் குழந்தையை மீட்டனர்.
இதனையடுத்து குழந்தையை மருத்துவப் பரிசோதனை மற்றும் கவனிப்புக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும், குழந்தைக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. எனவே, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங் மற்றும் அவரது மனைவி ராஷி ஆகியோர் அந்த குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அவர்கள் இக்குழந்தையை தங்கள் குடும்பத்தில் வரவேற்க சட்டப்பூர்வமான செயல்முறையைத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு 2018ல் திருமணமாகி குழந்தை இல்லாத நிலையில், நவராத்திரி பண்டிகையின் போது குழந்தை கிடைத்ததை தெய்வீக ஆசீர்வாதமாக கருதி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் அங்கித் சவுகான், குழந்தையை தத்தெடுக்கும் செயல்முறை தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து அக்குழந்தை தற்போது புஷ்பேந்திர சிங் குடும்பத்தினரின் பராமரிப்பில் உள்ளது.