கடனை திருப்பி கொடுக்காததால் இளைஞர் காரில் கடத்தல்: சென்னையில் 2 பேர் கைது


கைதானவர்கள்

சென்னை: கடனை திருப்பி கொடுக்காததால் இளைஞரை காரில் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(20). சென்னை வடபழனியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அதிகாலை, வேலை முடிந்து தனது நண்பர் பாஸ்கர் என்பவருடன், வடபழனி துரைசாமி சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், தினேஷை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், இதுகுறித்து வடபழனி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சூலூர்பேட்டை, திருப்பதி சாலை - பொலுரு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அந்த காரை மடக்கிப் பிடித்து, காரில் கடத்தப்பட்ட தினேஷை போலீஸார் மீட்டனர்.

மேலும், தினேஷை காரில் கடத்தியவர்களை வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருப்பதி பொம்மிடு கல்வா பகுதியை சேர்ந்த சுரேந்திர ரெட்டி(21), கடப்பா பத்வேல் பகுதியை சேர்ந்த வெங்கடா ஜெய மணிகண்டா(20) என்பதும், சுரேந்திர ரெட்டியிடம், தினேஷ் கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால், அவரை காரில் கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

x