சென்னை: அரும்பாக்கம் அருகே கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஐ-போன் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் பூந்தமல்லி - நெடுஞ்சாலையில் வசித்து வரும் மோகன் பாபு. இவர் தான் வசிக்கும் வீட்டு வளாகத்திலேயே செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு மோகன் பாபு அவரது செல்போன் கடையில் இருந்த போது, கடைக்கு வந்த ஒருவர் செல்போன் வாங்குவது போல் ஒவ்வொரு புதிய செல்போன்களையும் பார்த்துள்ளார்.
அப்போது, அவர் செல்போனை சார்ஜ் போட வேண்டும் என மோகன் பாபுவிடம் கூறி தனது செல்போனை கொடுக்கவே, மோகன் பாபு அந்த செல்போனை வாங்கி கடைக்குள் சென்று சார்ஜரில் இணைத்துவிட்டு திரும்ப வந்து பார்த்த போது செல்போன் வாங்க வந்த நபர், கடையிலிருந்த விலை உயர்ந்த ஐ-போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மோகன் பாபு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அரும்பாக்கம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு, ஐ போனை திருடிச்சென்ற லஷ்மி நாராயணன் (எ) விக்கி என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து கடையிலிருந்து திருடிச்செல்லப்பட்ட ஐ-போன் மீட்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட லஷ்மி நாராயணன் (எ) விக்கி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.