கோவில்பட்டி: தருவைகுளம் அருகே தெற்கு கல்மேடு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தருவைகுளம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தருவைகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் போலீஸார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தெற்கு கல்மேடு கிராம அருகே நடந்த வாகன சோதனையில், அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்துக் கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தினர்.
போலீஸார் வாகனத்தை நிறுத்தியதும், வாகனத்தில் இருந்து ஓட்டுநர் உட்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீஸார் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 63 மூட்டைகளில் சுமார் 35 கிலோ பீடி இலைகள் இருந்தன.
இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், இங்கிருந்து கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகளை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனத்தில் இருந்து தப்பி சென்ற இருவரை தேடி வருகின்றனர்.