தாழையூத்து ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கு: கவுன்சிலர் உட்பட 6 பேருக்கு இரட்டை ஆயுள்


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி கிருஷ்ணவேணி (38) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் அப்போதைய கவுன்சிலர் உட்பட 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்தை சேர்ந்த பொய்யாமணி மனைவி கிருஷ்ணவேணி. 2011ம் ஆண்டில் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பு வகித்தார். அப்பகுதியில் கழிப்பறை கட்டுவது தொடர்பாக அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் 2011ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இரவு 9 மணியளவில் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கிருஷ்ணவேணி ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவை வழிமறித்து ஒரு கும்பல் அவரை சராமாரி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிருஷ்ணவேணியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து தாழையூத்து ஊராட்சியின் அப்போதைய கவுன்சிலர் சுப்பிரமணியன் (60), அவரது நண்பர் சுல்தான் மைதீன் (59), ஜேக்கப் (33), கார்த்திக் (34), பிரவீன் ராஜ் (32), விஜயராமமூர்த்தி (34), ராமகிருஷ்ணன், சந்தனமாரி, நடராஜ் ஆகிய 9 பேரை கைது செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்து சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், ஜேக்கப், கார்த்திக், பிரவீன் ராஜ், விஜய ராமமூரத்தி ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 8ம் தேதி நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்ட 6 பேருக்கான தண்டனை விவரங்கள் 10ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையின் போது நடராஜ் என்பவர் மரணடைந்துவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ராமகிருஷ்ணன், சந்தனமாரி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றம் தெரிவித்திருந்தபடி 6 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி சுரேஷ் குமார் அறிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1.30 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

x