கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவிலில் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த தனிப் பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நாச்சியார்கோவில் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்று வருவது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது. ஆனபோதும் மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில் அண்மையில், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்பியின் தனிப்பிரிவு காவலர் ராஜா மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ராஜா செல்போனில் பேசிய உரையாடல் குறித்த ஆடியோ ஒன்றும் வெளியாகி மாவட்ட காவல் துறை வட்டாரத்தைக் கலங்கடித்தது. இதனையடுத்து தனிப்பிரிவு காவலர் ராஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நாச்சியார்கோவில் போலீஸார் கூறியதாவது, "நாச்சியார்கோவிலில் மணல் திருட்டு தொடர்பாக துப்புக் கிடைத்து போலீஸார் அந்த இடத்திற்குச் சென்றால், அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு முன்பாகவே மணல் திருடர்களுக்கு யாரோ தகவல் தெரிவித்து அவர்களை தப்ப வைத்தது தொடர்ச்சியாக நடந்து வந்தது. இது தொடர்பாக போலீஸார் கண்காணித்து வந்த போது, நாச்சியார்கோவில் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸாக பணியாற்றி வந்த ராஜா சிக்கினார்.
அவர் தனது செல்போன் மூலம், மணல் கொள்ளையர்களுக்கு போலீஸாரின் நடவடிக்கைகள் அனைத்தையும் அப்டேட் செய்துள்ளார். நாங்கள் போலீஸ் குழுவில் பதிவிடும் அனைத்து தகவல்களையும், ஆடியோவாக பதிவு செய்து அதையும் மணல் கொள்ளையர்களுக்கு அனுப்பியுள்ளார் ராஜா. இது தொடர்பான தகவலும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்பிரிவு காவலர் ராஜாவை, பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள தனிப்பிரிவு போலீஸார் பலர், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக உள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து அவர்களையும் உளவுப் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" என்று போலீஸார் கூறினார்.