பிஹார்: முசாபர்பூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் செய்த வேலைக்கு கூலி கேட்டதற்காக தலித் தொழிலாளியின் முகத்தில் எச்சில் துப்பி சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கர்பூர் வடக்கில் வசிக்கும் ரமேஷ் படேல் என்பவரின் கோழிப்பண்ணையில், தினக்கூலி தொழிலாளியாக பட்டியலினத்தை சேர்ந்த ரிங்கு மஞ்சி என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், ரிங்கு மஞ்சி தான் செய்த இரண்டு நாள் வேலைக்கான கூலியை கேட்டு, அக்டோபர் 4 ஆம் தேதி ரமேஷ் படேலிடம் சென்றுள்ளார்.
சம்பளம் கேட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ் படேல், அவரது சகோதரர் அருண் படேல் மற்றும் அவரது மகன் கௌரவ் குமார் ஆகியோர் ரிங்குவை கடுமையாக தாக்கினர். மேலும் ரமேஷ் படேல் மற்றும் அவரது மகன் கௌரவ் குமார் ஆகியோர் ரிங்கு மீது சிறுநீர் கழித்ததாகவும், அவரது முகத்தில் எச்சில் துப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக இந்த சம்பவத்தின் வீடியோவை ரிங்கு மஞ்சி காவல்துறையிடம் பகிர்ந்துள்ளார். புகாரைப் பெற்றதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிஎன்எஸ் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முசாபர்பூரின் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் விதா சாகர் கூறுகையில், " அந்த நபர் வழங்கிய வீடியோவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். விசாரணையை அடுத்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.