உடுமலை: திண்டுக்கல் மாவட்டம் பழநி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). பழைய கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தனது காரில் சென்றார். பின்னர் நேற்று அதிகாலை கிணத்துக்கடவில் இருந்து பழநிக்கு காரில் கிளம்பினர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கருப்புசாமி புதூர் அருகே புதிய பைபாஸ் சாலை வழியாக கார் சென்றது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 23 பேர் பழநியில் சாமி தரிசனம் செய்துவிட்டு, வேனில் கேரளா நோக்கிச் சென்றனர். எதிர்பாராதவிதமாக, கார் மற்றும் வேன் ஆகியவை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த தியாகராஜன் (45), அவரது மனைவி ப்ரீத்தி (40),மகன் ஜெய்பிரியன் (11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தாயார் மனோன்மணி (65) உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேனில் பயணம் செய்தவர்களில் 12 பேருக்கு லேசான காயம்ஏற்பட்டது. உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிக்சைக்கு பின்னர் அவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். விபத்து குறித்து மடத்துக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.