விழுப்புரம்: நகராட்சி ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.8 கோடி மோசடி செய்த தற்காலிக அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் சந்தானகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் வினீத் (23). இவர் விழுப்புரம் நகராட்சியில் கடந்த 2021 முதல் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும், விழுப்புரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
நகராட்சியில் அலுவலகத்தில் கணினியில் தரவுகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட வினீத்துக்கு, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதியை (பி.எஃப். தொகை)கருவூலத்தில் செலுத்தும் பணியும்வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், நகராட்சி ஊழியர் ஒருவர் தனது பி.எஃப். பணத்தை எடுக்கச் சென்றபோது, கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. இதுதொடர்பாக கருவூலஅதிகாரிகள், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையினருக்குத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, வேறொரு ஊழியர் சேமநல நிதியில் இருந்துசிறுதொகையை கடன் பெற விண்ணப்பித்தபோது, அவர் ஏற்கெனவே கடன் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் நகராட்சிகள் இயக்குநருக்கு புகார் அளித்தார்.
இது தொடர்பாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் லட்சுமிமற்றும் தணிக்கை துறை அலுவலர்கள் விசாரித்தனர். இதில், ஊழியர்களின் சேமநல நிதியில் போலி ஆவணங்கள் மூலம் கடந்த3 ஆண்டுகளில் ரூ.8 கோடியை வினீத் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நகராட்சிஆணையர் வீரமுத்துகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, வினீத்தை நேற்று கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக வளர்மதி, பனங்குப்பம் அஜித்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. வினீத்தின் 3 சொகுசு கார்கள், மினி வேன்மற்றும் சொத்து ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வினீத் 2021-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு தொடர்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு ரூ.8 கோடியை அனுப்பி, அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட வினீத், விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்