தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த முத்துக்குமரன் (35). இவர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆக.12ம் தேதி மாணவியரின் பெற்றோர் சிலர் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்குப் புகார் அளித்தனர். அதில், 9ம் மற்றும் 10ம் வகுப்பு வகுப்புகளில் படிக்கும் மாணவியரிடம், முத்துக்குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து ஆக.13ம் தேதி, சைல்ட் ஹெல்ப் லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகிய 2 பேரும், பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளிடம், பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பிறகு, சம்மந்தப்பட்ட ஆசிரியர் முத்துக்குமரன் தொடர்பாக, 43 மாணவிகளிடம், துண்டு சீட்டில் எழுதித் தரக் கூறியுள்ளனர். அதில், சில மாணவிகள், கணித ஆசிரியர் முத்துகுமரன் பாலியல் தொல்லை கொடுப்பதாக எழுதி கொடுத்ததை அறிந்து சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், தங்களின் விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக.14ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், கல்வித்துறை தரப்பில் எவ்வித புகாரும் கொடுக்காமல் 2 மாதம் இருந்து வந்துள்ளனர். இது தொடர்பாக, பெற்றோர்கள் சிலர் மீண்டும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினரை தொடர்புக்கொண்டு கேட்டபோது, முத்துக்குமரன் மீது எந்தவித வழக்கும் பதியவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இன்று பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்பேவதாக அறிவித்தனர். இதற்கிடையில், சைல்டு ஹெல்ப்லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்.8ம் தேதி புகார் அளித்தார்.
அதன் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர். விசாரணையில், முத்துக்குமரன், பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.