கரூர் வெண்ணெய்மலையில் கோயில் நிலத்தில் இருந்த 5 கடைகளுக்கு சீல் - மறியலால் பரபரப்பு


கரூர்: கரூர் வெண்ணெய்மலையில் கோயில் நிலத்தில் நடத்தப்பட்டு வந்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் மறியல் செய்தனர். இதையடுத்து 13 பேரை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த செப்.18ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையில் செப்.19ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து வெண்ணெய்மலை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வருவாய்த் துறை உதவி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகாரிகளிடம் மதுபோதையில் வாக்குவாதம் செய்த அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதனால் போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அளவீடு பணிகள் மீண்டும் தொடங்கியது. இன்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இந்து சமய அறநிலையத் துறையினர் 5 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு பெண் உள்ளிட்ட 13 பேரை வெங்கமேடு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

x